Monday, 24 November 2014

விளையாடத் தடை ஏது ?

விளையாடத் தடை ஏது ?

  •  
     
  •  
     
பள்ளியிலும், கல்லூரியிலும் விளையாடி எக்கச்சக்கமாகப் பரிசுகள் குவித்திருக்கிறேன். விளையாட்டுதான் என் உயிர் மூச்சு. இந்தியாவுக்காக விளையாடிப் புகழடைவதுதான் என் கனவு. 

ஆனால் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சூழல் சாதகமாக இருக்க வேண்டாமா? என ஏக்கத்தோடு கூறும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியது நடிகை, ஸ்டண்டு கலைஞர், நடனக் கலைஞர், ஓவியர், திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் எனப் பல அவதாரங்கள் எடுத்த லெனி ரைபென்ஸ்தாலலின் வாழ்க்கை. அதெப்படி ஒருவர் இத்தனை ரூபங்கள் எடுக்கமுடியும் என ஆச்சரியமாக இருக்கலாம். அவருடைய ஒவ்வோர் அவதாரத்துக்குப் பின்னால் இருப்பது அனுகூலமான சூழலோ, கதவைத் தட்டிய வாய்ப்புகளோ அல்ல. எப்படித்தான் அவர் அவ்வளவு சாதித்தார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

நடன தாரகை 

சினிமா பிறந்து 7 வருடங்கள் கழித்து 1902-ல் பெர்லினில் பிறந்தார் லெனி ரைபென்ஸ்தால். இளம்பிராயத்தில் நடனமும், ஓவியமும் கற்றுக் கொண்டிருந்த லெனிக்குப் பிரபல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தன. பிரபலமடைந்து வரும் காலத்தில் ஒரு விபத்தில் முழங்காலில் அடிபட நடன வாழ்வு முடிந்து போனது. காலில் வலியையும் மீறித் திரைப்படம் ஈர்க்க, ஒரு நாள் ஒரு தியேட்டருக்குள் நுழைந்தார். லெனி பார்த்த திரைப்படத்தில் பிரம்மாண்டமான பனி மலையில் மலை ஏற்றம், பனிச்சறுக்கு எனப் பல சாகசக் காட்சிகள் காட்டப்பட்டன. லெனி அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் மலை ஏறும் நிபுணரான அர்னால்ட் பான்க்கினை உடனடியாகத் தேடிச் சந்தித்து நடிக்க விருப்பம் தெரிவித்தார். 

சாகச நடிகர் 

அடுத்த நொடி முதல் மலை ஏற்றம், பனிச்சறுக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார். 1926-ல் ‘தி ஹோலி மவுண்டன்’ என்ற படத்தின் மூலம் சாகச கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சாகசப் படங்களில் நடித்து ஜெர்மனியின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார். ஒரு கட்டத்தில் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற கனவு தோன்றவே 1932-ல் ‘புளூ லைட்’ என்ற படத்தைத் தானே தயாரித்து, இயக்கி, நடித்தார்.

செலுலாய்ட் சிற்பி 

அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனியை உலகின் முதன்மையான நாடாக மாற்ற வேண்டும் என மக்களிடம் வீர உரை நிகழ்த்தி வந்தார் ஹிட்லர். அவரால் ஈர்க்கப்பட்ட பலரில் லெனியும் ஒருவர். 1933-ல் ஆட்சிக்கு வந்தவுடன், கட்சிப் பிரச்சாரப் படங்களை லெனியைத் தயாரிக்கச் சொன்னார் ஹிட்லர். 1934-ல்
நியூரம்பர்க்கில் நடத்தப்பட்ட நாஜி கட்சி மாநாட்டைப் படமெடுத்தார் லெனி. அப்படி உருவானதுதான், இன்று வரை உலக அரங்கில் பேசப்படும் ஆவணப் படமான “டிரயம்ப் ஆஃப் தி வில்”. அடுத்து 1936-ல் அறுபதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவுக் கலைஞர்களை வைத்து லெனி படைத்த செலுலாய்ட் கவிதை பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. ஹிட்லரின் சுயரூபம் அறிந்த பின்னர் இனி அவருக்குத் துணை போவதில்லை என முடிவெடுத்தார் லெனி.

அடிக்கு மேல் அடி
 
ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் தோல்வியடைந்த பிறகு, லெனி ஹிட்லரின் ஆதரவாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய சொந்த வீடு, படமெடுக்கும் கருவிகள் என அனைத்தும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. சில நாட்கள் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பின் தாயுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1953- ல் அவரது காமிரா, எடிட்டிங் கருவிகள் திருப்பித் தரப்பட்டன. மீண்டும் படம் எடுக்கத் தொடங்கிய போது, ஒரு கார் விபத்தில் படு காயமடைந்தார். திரைப்படம் எடுக்க லெனி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தன. ஆனால் 
சோர்வடையவில்லை லெனி. புகைப்படக் கலைக்குத் திரும்பினார். 

வன வாசம்
 
ஒரு முறை சூடான் நாட்டுக்குச் சென்று அங்கு வாழும் நூபா பழங்குடி மக்களைச் சந்தித்த பின் அவர்களுடனே தங்கிவிட்டார். இயற்கையோடு இணைந்திருந்த நூபிய மக்களின் வாழ்வைப் புகைப்படங்கள் எடுத்து 1972 முதல் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினார். அவரைப் பாராட்டி சூடான் அரசு அவருக்குக் குடியுரிமை அளித்துக் கவுரவித்தது. மீண்டும் புகழின் உச்சிக்குப் போனார் லெனி. 

கடலுக்குள் காமிரா
 
71-வது வயதில் ஆழ்கடல் மூழ்கும் பயிற்சி பெற்ற லெனி கடலின் அற்புதங்களைப் படமெடுக்கத் தொடங்கினார். 2003-ல் ‘வண்டர்ஸ் அண்டர் வாட்டர்’ என்னும் அவரது ஆழ்கடல் ஆவணப் படம் வெளிவந்தது.

செத்துப் பிழைத்தவர் 

98 வயதில் தன் நூபா பழங்குடி தோழர்களை மீண்டும் காணலாம் என சூடானுக்குச் சென்றபோது, ஹெலிகாப்டர் விபத்தில் அவரது உடல் உருக்குலைந்தது. ஆனால் மீண்டும் செத்துப் பிழைத்து எழுந்தார் லெனி. விட்டதா விதி? அவரது 100-வது வயதில் நாஜி பிரச்சினை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த முறை விடுவிக்கப்பட்டபோது லெனியின் உடல் நிலை மோசமாகியது. 2003-ல் 101-வது பிறந்த நாளைக் கொண்டாடிய சில வாரங்களில் அவர் மரணமடைந்தார். 

பல முறை விழுந்தவர், வீழ்த்தப்பட்டவர் லெனி. ஆனால் ஒரு முறைகூட சாய்ந்துவிடவில்லை, ஓய்ந்துவிடவில்லை. ஒவ்வொரு முறை தாக்கப்பட்ட போதும் அவர் வேகம் இன்னும் பல மடங்கு கூடியிருக்கிறது. தன்னைப் பார்த்து வீசப்பட்ட அத்தனை தடைக் கற்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட லெனி என்னும் போராளியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. உடல் ரீதியான அறிவுத்திறனுக்கும் மன வலிமைக்கும் இவரைக் காட்டிலும் சிறந்த உதாரணம் இருக்க முடியுமா என்ன?

 

No comments:

Post a Comment