Wednesday, 15 October 2014

மனிதருக்குள் எத்தனை மனிதர்கள்?

மனிதருக்குள் எத்தனை மனிதர்கள்?


மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற அம்மாபட்டிங்கிற ஒரு கிராமத்துக்குப் பக்கத்தில இருக்கிற ஒரு காலேஜுக்குப் போகணும். காலேஜுல வண்டி அனுப்பறதாச் சொல்லி இருந்தாங்க. ஆனா, திடீர்னு டிரைவர் போன் பண்ணி “சார் மன்னிச்சுக்குங்க. வண்டி பஞ்சர் ஆயிடுச்சி” ன்னு கெஞ்சினாரு. நான் “பரவாயில்லைபா, எப்படியாவது வந்துடறேன்னு” சொல்லிட்டேன். ஏதாவது டாக்ஸி கிடைக்குதான்னு பாத்தேன். அந்த காலேஜ் கிட்ட போற ஒரு டவுன் பஸ்ஸைப் பிடிச்சேன்.
ஏறினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அது கிட்டத்தட்ட “மெட்ராஸ் டு பாண்டிச் சேரி” படத்துல வர பஸ் மாதிரின்னு. “ஹாரனை” தவிர மத்த எல்லா “பார்ட்ஸ்” லேந்தும் சத்தம் வந்தது. பஸ்சில் உள்ளவர் களை நோட்டம் விட்டேன். நல்ல கூட்டம்.
பலவகை பர்சனாலிட்டிகள்
கடமை கண்ணாயிரமாக ஒருவர் ஏறினார். கண்டக்டர் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் எல்லாரையும் தள்ளிவிட்டு போய் கரெக்டா டிக்கெட் வாங்கினார். சில்லறையை கரெக்டா கொடுத்து, கண்டக்டர்கிட்ட பாராட்டுப் பத்திரமும் வாங்கினார். யாரையும் தொந்தரவு பண்ணாத இடமாக ஒதுங்கி நின்று கொண்டார். யாராவது டிக்கெட் பாஸ் பண்ணா உதவி செய்தார். கடமை தவறாத ஒரு பர்சனாலிட்டி.
பக்கத்துல இன்னொருத்தர் பஸ்ஸுக்கே கேக்கிற மாதிரி மொபைல்ல பேசிகிட்டே இருந்தார். கண்டக்டர் சொன்னதைக் காதால மட்டும் கேட்டுகிட்டே இருந்தார். எவ்வளவு பைசா அவர் கேட்டாரோ அதைக் கொடுத்தார். பஸ் அங்க நிக்காது சார் என்று சொன்னாக் கூட ஓகேன்னு சொன்னார்.
ஆனால், லேடிஸ் சீட் பக்கம் நிக்காதிங்க சார்னு சொன்னா அதைக் காதுல வாங்கிக்கலை. அவருடைய மூளை வேற எதையோ யோசிச்சிகிட்டே இருந்தது. இவர் ஒரு மிஷின் மாதிரி.
“ஏம்பா தம்பி, வயசானவங்க நிக்கிறாங்க இல்ல. கொஞ்சம் எழுந்து இடம் உடுப்பா ராஜா” ன்னு ஒரு பையனை எழுப்பி தாய்க்குலத்தின் தலைமகனா நடந்துகிட்டார் ஒருவர். தனக்கு உட்காரச் சீட் கிடைச்ச உடனே பக்கத்தில வெயிட்டை வச்சிக்கிட்டு நிக்கிறவர்கிட்ட “கொடுங்க சார் நான் வச்சிக்கிறேன்” னு அவரே பொருளைக் கேட்டு வாங்கி வச்சிகிட்டார். “கிடைச்ச நேரத்துல தன்னால முடிஞ்ச உதவியைச் செய்யறவர் இவர், உதவி செய்கிற ஒரு பர்சனாலிட்டி.
“சார் கொஞ்சம் தள்ளிக்கறிங்களா. என் ப்ரெண்ட்கிட்ட போகணும்” குரல் கேட்டுத் திரும்பினேன். ஒரு லேடி உள்ள வந்தாங்க. ப்ரெண்டைப் பாத்துட்டாங்க. “ஏய் உன் சாரி கலர் நல்லா இருக்கு இல்ல, டிசைன் புதுசா? மயிலறகாடி இது? அந்தத் தலைப்புல இருக்கிற ரோஜாப்பு லோட்டஸ் மாதிரி தெரியுது. நான்கூட இந்த நகை வாங்கினேன்”. இது யாரு உன் பொண்ணா? இந்த கவுன் சாரிலேந்து தெச்சதா? இப்படி அவங்க கண்ணுக்குத் தெரியற எல்லா விஷயத்தையும் ஒரு கலை நயத்தோட பாத்தாங்க. சரிதான். ஒரு ஆர்டிஸ்டிக் பர்சனாலிட்டி.
பஸ் வேற என்னை கைப் பிடிச்சி நடத்தி கூட்டிக்கிட்டுப் போற மாதிரியே ஒரு பீலிங். சைக்கிள்ல்லாம் வேற அதை ஓவர்டேக் பண்ணிக்கிட்டுப் போகுது. “கடவுளே என்னை எப்படியாவது கொண்டு போய் காலேஜ்ல சேத்துருப்பான்னு வேண்டிக் கிறதுக்குள்ள, ஒரு குமுறல் கேட்டது.
“என்ன சார் இல்ல நம்ம நாட்டுல? நம்மதான் குறை சொல்லிக்கிட்டே இருக்கோம். வளர்ச்சிப் பணிகள் நிறைய நடந்துகிட்டு தான் இருக்கு. நாம் தான் அதை ஒட்டி வளர்ந்துகிட்டே போகணும். நமக்கு ஒண்னு தெரியலன்னா மற்றதைக் குறை சொல்லக் கூடாது. புதுக் கொள்கையும் கோட்பாடும் வேணும் சார்”ன்னு தன் பக்கத்தில இருந்தவர் கிட்ட பேசிகிட்டு இருந்தார். அவரும் “எதுக்கும் ஆமாம்னு சொல்லிடுவோம். இல்லன்னா அடிச்சிடுவார்னு பயந்தோ என்னவோ ஆமாம் ஆமாம்ன்னு புரிஞ்ச மாதிரி தலையாட்டிகிட்டே இருந்தாரு. ஏன் புரிஞ்ச மாதிரின்னு சொல்லனும். நிஜம்தான்னு கூட அவர் நினைச்சிருக்கலாம்.. உடனே என் பக்கத்தில நின்ற கொஞ்சம் படிச்சவர் சார். இவரு எங்க உறவு. கொஞ்சம் “ஐடிய லிஸ்டிக்” ஆளு. எங்க வீட்டுல கூட இப்படிப் பேசிகிட்டே இருப்பார்னு சொன்னாரு.
நான் அப்படியான்னு தலையாட்டி முடிக்கிறதுக்குள்ள, “பஸ்ல இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம். வேற ஒன்ணும் இல்ல. டிரைவர் “சடன் பிரேக்” போட்டாரு. போட்டதுதான் தாமதம். அட்வைஸ் ஒன்னு பறந்து வந்தது. “என்ன பிரேக் ஓபன் ஆகிடுச்சி.? க்ளட்ச் ஒங்க கண்ட்ரோல்ல இல்லியா. “ரஸ்ட்” ஆகியிருக்கும் சார். . கண்ணாடி ஆங்கிள் சரியாய் இல்ல பாருங்க. டிரைவர். “ப்ரெண்ட் மிர்ரர் கூட கலரிங் சரியில்லை. . பஸ்சையே உருவாக்கினவர் போல் பேசினார்.
டிரைவர் சிரிச்சுகிட்டே “ஒரு பிரேக் போட்டதுக்கே இவ்வளோ கிளாஸ் எடுத்திங்க. நல்ல வேளை வண்டி ஓடாம நிக்கலை. நின்னிருந்தா எனக்கும் இங்க எல்லாருக்கும் ஒரு சயன்டிஸ்ட் மாதிரி கிளாஸ் எடுத்திருப்பீங்க”னு சொல்லிகிட்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
எத்தனை விதமான மனிதர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பர்சனாலிட்டி. இன்னும் பல மனிதர்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. வாருங்கள் பயணிப்போம். 

 

தொடர்புக்கு : sriramva@goripe.com

Saturday, 4 October 2014

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி

காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி 

 
 
காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975
தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! 
 
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! 

அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் முதுகலைப் படிப்பு முடிக்கும்வரை கல்விக் கட்டணம் என்று எதுவும் செலுத்தியதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கல்வி விதி-92ன்படி கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தேன். 

எல்லோரும் கொண்டுவருவோம்!
 
இப்போது சத்துணவுத் திட்டம் இருப்பதுபோல அப்போது பள்ளிகளில் ஒரு வகை மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. மாணவர்களையும் சமுதாயத்தையும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கச் செய்த முறை அபாரமானது. தொடக்கப் பள்ளியில் வகுப்புக்கு ஒரு உண்டியல் வைத்து அன்றாடம் மாணவர்கள் அதில் சில்லறைக் காசு சேர்ப்போம். வகுப்புகளுக்குள் இதில் போட்டி உண்டு. பள்ளியில் கூட்டுவழிபாடு முடிந்தவுடன் மாணவர்கள் வீட்டிலிருந்து அன்றைக்குக் கொண்டுவந்த காய்கனி, தேங்காய் போன்றவற்றை மிகவும் சிலாகித்துச் சொல்லி ஒரு ஆசிரியர் ஏலம் விடுவார். இங்கிலாந்தில் இப்படி ஒரு நடைமுறை (ப்ரிங்க் அண்ட் பை) இருந்ததாக பின்நாட்களில் தெரிந்துகொண்டேன். தை மாத விடுமுறை நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, நெல்லாகக்கூட மாணவர்கள் நிதி வசூலித்துவருவோம். அட்டைகளின் கட்டங்களில் கையொப்பமிடுபவர்களிடம் கட்டத்துக்கு நான்கணா வீதத்தில் பெற்றுவருவோம். 

எங்கள் அப்பச்சி 
 
1968-ம் ஆண்டு, டிசம்பர் மாதம். கிறிஸ்துமஸ் விழாக் காலம். காமராஜர், நாகர்கோவில் தொகுதி நாடாளு மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவருக்காகப் பிரச்சாரம் செய்ய நானும் சில மாணவர்களுடன் திங்கள்சந்தை என்ற ஊரில் தங்கியிருந்தேன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் மத்தையசுக்கு ஆதரவாக காரைக்குடி சா. கணேசன் பேசும்போது காமராஜரைக் குறிப்பிட்டு, “ உள்ளூர் சந்தையில் விலைபோகவில்லை, வெளியூருக்கு வந்திருக்கிறது” என்பார். அதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு நடந்த விருதுநகர் தேர்தலில் காமராஜர் வெற்றிபெறவில்லை என்பதை அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஆனால், காமராஜருக்கு நாகர் கோவில் வெளியூரல்ல என்பதை நாங்கள் பிரச் சாரத்தின்போது கண்டோம். சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் ஊருக்கு வெளியே வந்து எங்களை வரவேற்று, “எங்க அப்பச்சிக்கா நீங்க ஓட்டு கேக்க வரணும்?”, “எங்க தாத்தாவுக்கு நாங்க ஓட்டு போட மாட்டோமா?” என்றெல்லாம் கேட்பார்கள். மரத்தடியில் விசுப்பலகையில் எங்களை உட்காரவைத்துப் பதநீர் கொடுத்து உபசரிப்பார்களே தவிர, வாக்கு கேட்க விட மாட்டார்கள். இவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும், தனக்குப் பிரச்சாரம் செய்ய வந்துகொண்டேயிருந்த பெருங்கூட்டத்தில் யாரெல்லாம் பேசினால் தனக்குப் பாதகமாகும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். 

தலையணையின் கீழ் ரூ. 160 
 
தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவரால் பெயரிட்டு அழைக்க முடியும். நல்லதானாலும், கெட்ட தானாலும் அவர்களுடன் பங்கேற்க அவர் தயங்கு வதில்லை. சுதந்திரம் அடைந்தால்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று இருந்த தொண்டர்களுள் எனது மாமனாரும் ஒருவர். அவரது திருமணத்தின்போது காமராஜருக்குக் கடுமையான பல்வலி. அதைப் பொருட்படுத்தாமல், முகத்தோடு தலையையும் ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு திருவல்லிக்கேணியில் நடந்த திருமணத்துக்கு வந்து, இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல், சிரமப்படுகிறவர்களுக்கு அவர்கள் கேட்குமுன் கொடுப்பது அவர் வழக்கம். இத்தனைக்கும் தன் கையில் ஒரு சல்லிக் காசுகூட அவர் வைத்துக்கொள்வதில்லை. ‘அவர் இறந்தபோது அவருடைய தலையணைக்குக் கீழே 160 ரூபாய் ஒரு காகித உறையில் இருந்தது’ என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது ஒன்றும் கட்டுக்கதையல்ல. காமராஜரைப் பற்றிச் சொல்லப்படும் இதுபோன்ற விஷயங்கள் கட்டுக்கதை போன்று நமக்குத் தோன்றுவதற்குக் காரணமே, தற்போதைய அரசியல்வாதிகளின் ‘எளிமையான’ வாழ்க்கைமுறைதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

எதிர்கொள்வது, வெற்றிகாண்பது! 
 
பிரச்சினைகளுடன் சமாதானம் செய்துகொள்வது அவருக்குப் பழக்கமில்லை. அரசியலானாலும் நிர்வாக மானாலும் உள்கட்சிப் பூசலானாலும் எதிர்கொண்டு சந்திப்பார். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்க்கும்வரை அவர் தூங்குவதில்லை. இப்படி விடாப்பிடியாக இருப்பவர்கள் அரசியலில் வெற்றி காண்பது அரிது. ஆனால், காமராஜர் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார். அன்றைய மத்திய உள்துறை அமைச் சராக இருந்த பிரம்மானந்த ரெட்டி தலைமையில், காமராஜரைப் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், “காமராஜரின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், பிரச்சினைகளை எதிர்கொள்வது, வெற்றிகாண்பது என்று கூறிவிடலாம்” என்றார். காமராஜரின் தன்னம்பிக்கையும் துணிவும் நிகரற்றவை. 

சுட்டது, விட்டோம் என்று கையை உதறிவிடுவது அவர் வழக்கமல்ல. தீர்வே இல்லை என்றிருந்த தமிழ்நாட்டு நெசவாளர் பிரச்சினைக்கு, நூல் விநியோகத்தில் ரேஷன் முறையை அமல்செய்து, தீர்வுக்கு முயற்சி செய்தார். இதற்காக அப்போது ஐந்தரை லட்சம் ரேஷன் அட்டைகள் இருந்தனவாம். நெசவாளர்கள் பட்டினி கிடந்தபோது ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து உண வளிப்பதில் பிடிவாதமாகச் செயல்பட்டார். 

‘தி இந்து’ பாராட்டிய காமராஜரின் ஆங்கிலம்
காலணா பத்திரிகையான ‘ஜெயபாரதம்’முதல் ‘தினச் செய்தி’, ‘காங்கிரஸ் செய்தி’, பின்னர் ‘நவசக்தி’வரை இத்தனை பத்திரிகைகளும் அவர் பராமரிப்பில் நடை பெற்றவையே. அவரைப் படிக்காத மேதை என்று சொல்வது உயர்வுநவிற்சி கருதிச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அவர் நிறையப் படித்தார். அன்றாடம் எல்லா தினசரிகளையும் படித்துவிடுவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமாகவே சரளமாகப் பேசக் கூடியவர். 1969-ல் ஒருமுறை அவரது வீட்டு மாடி அறையில் அவரைச் சந்தித்தேன். ஒற்றைக் கட்டில்; அருகே சில கதர் வேட்டிகளும் சட்டைகளும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. ராக்கைகளில், அறையின் ஒரு சுவர்ப் பரப்பு முழுவதும் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களாக இருந்தன. நாடாளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்தில் பேசியதை ஒருமுறை ‘தி இந்து’ நாளிதழ் ‘காமராஜர் மாசில்லாத ஆங்கிலத்தில் உரையாற்றினார்’ என்று விவரித்திருந்தது. 

எனக்குத் தெரியும், உட்கார்! 
 
நல்ல உயரம். களையான முகத்தில் தீட்சண்யமான, புடைபரந்த கண்களோடு கம்பீரமாக இருப்பார். தேனாம் பேட்டை மைதானக் கூட்டமொன்றில், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவராக கக்கனை காமராஜர் அறிவித்தார். கூட்டத்தின் பின் பகுதியிலிருந்து மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி ஒரு சலசலப்பு. “எனக்குத் தெரியும், உட்கார்” என்று அவர்களை அமர்த்தினார். பார்ப்பவர்கள் அவரது கம்பீரத்துக்கு அடிபணியாமல் இருக்க முடியாது. மேடைப் பேச்சிலும் நெஞ்சைத் தொடும் உண்மையின் தொனியும், அந்த உண்மை மட்டுமே கோத்துத்தரும் சொற்களின் அழகும் அவரது பேச்சைக் கேட்டவர்களின் அனுபவம். 

காமராஜர், இரவில் வெகுநேரம் கழித்தே தூங்கு வார். மாம்பலம் டாக்டர் சவுரிராஜன், தலைச்சேரி தாமோதரன் இவர்களோடு காமராஜர் எலியட்ஸ் கடற்கரையில் இரவில் வெகு நேரம் அரசியல் அலசிய பிறகு வீட்டுக்குச் செல்வார். ஒரு நாளைக்கு இரு வேளை நீராடி உடை மாற்றுவது அவரது வழக்கம். அசைவ உணவுகளில் பிரியம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்பர்கள் கோயில் பிரசாதம் கொடுத்தால் அணிந்துகொள்வது தவிர அவராகவே சாமி கும்பிட்டுப் பார்த்ததில்லை என்பார்கள். 1972-ல் விலைவாசி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தமிழகம் முழுவதும் காமராஜர் தீவிரமாக நடத்திக்காட்டினார். இறுதிவரை இந்திரா காந்தியுடன் அவர் சமரசம் செய்துகொள்ளவேயில்லை. அவ்வளவு தன்னம்பிக்கையும் துணிவும் கொண்டிருந்த காமராஜர் அதற்கு எப்படிச் சம்மதிப்பார்? 

- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com